Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்-பேரிகார்டில் மோதி கார்பெண்டர் பலி-சாலை மறியல்

சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோதி உயிரிழந்த இருசக்கர வாகன ஓட்டி : நீண்ட நேரம் ஆகியும் உடலை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். வயது (55), இவர் கார்பெண்டர் பணி செய்து வருகிறார். நேற்று இரவு விளாங்குடி கிராமத்திற்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில், திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது ரெட்டிபாளையம் கிராமம் அருகே அருகே பயணித்தபோது, சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக காவல்துறையினர் வைத்திருந்த பேரிகார்டில், மதியழகன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதனையடுத்து ரெட்டிப்பாளையம் பொதுமக்கள் விபத்து நடந்த இடத்தில் ஒன்றுகூடத் தொடங்கினர். விபத்து நடந்து நீண்ட நேரம் ஆகியும், உயிரிழந்த மதியழகன் உடலை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் ஏதும் வராததால், அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏறக்குறைய 2 மணி நேரத்திற்கு மேலாகியும் மதியழகன் உடலை எடுக்க எந்த ஆம்புலன்ஸ் வாகனமும் வராததால், பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பேரி கார்டு வைத்ததனாலேயே விபத்தில் மதியழகன் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி, சாலை மறியல் போராட்டத்தையும் தொடர்ந்தனர்.

இதனால் திருச்சி – சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஒருவழியாக ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு மதியழகன் உடலை, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.

error: Content is protected !!