அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட ரங்கோலி கோலங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் பார்வையிட்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தெரிவித்ததாவது,
அரியலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இணையதளத்தின் மூலம் முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு (Self enumeration) 17.07.2026 முதல் 31.07.2026 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. சுய கணக்கெடுப்பு பொதுமக்கள் தாங்களாகவே இணையதளம் https://se.census.gov.in வாயிலாக தங்கள் விவரங்களை பதிவு செய்யும் வசதி

ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் பணியான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு வருகிற 01.08.2026 முதல் 30.08.2026 வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
அந்தவகையில் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்றையதினம் அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விழிப்புணர்வு ரங்கோலி கோலங்கள் வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் பொறுப்பு அலுவலர்களாக 4 வட்டாட்சியர்கள், 2 நகராட்சி ஆணையர்கள், 2 பேரூராட்சி அலுவலர்கள், 207 மேற்பார்வையாளர்கள் மாவட்டம் முழுவதும் 1277 கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் தரவுகள் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் திட்டமிடல். வளவழங்கல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கான அடிப்படைத் தரவுகளை வழங்கும் மிக முக்கியமான தேசிய பணியாகும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் https://se.census.gov.in என்ற இணையதளம் வாயிலாக சுயக்கணக்கெடுப்பில் பங்கேற்று கணக்கெடுப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்கு வருகை தரும் போது முழுமையான தகவல்களை வழங்கி 2027 ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ந.கனக மாணிக்கம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செந்தில், அரியலூர் வட்டாட்சியர் தேவகி, தனி வட்டாட்சியர் (தேர்தல் பிரிவு) கண்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
