அரியலூர் – தென்னகத்தின் திருப்பதி என்று அழைக்கப்படும் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில்: கொடியேற்றத்துடன் தொடங்கியது
அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் பெருந்திருவிழா இன்று விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதங்களில் நடைபெறும் பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
விழாவின் தொடக்க நாளான இன்று, கலியுக வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு வேத

மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், கருட பகவான் படம் பொறிக்கப்பட்ட கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இத்திருவிழாவை முன்னிட்டு, திருவிழா நாட்களில் தினசரி சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய திருவிழாவான திருத்தேரோட்டம் வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதியும், அதனைத் தொடர்ந்து ஏகாந்த திருவிழா ஏப்ரல் 5-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்த திருவிழாவில் அரியலூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, பெரம்பலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சேலம், ஆத்தூர், கும்பகோணம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

