மதுரை அவனியாபுரம் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவழகன் அதிரடி உத்தரவு.
கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்றுவிட்டு, இளைஞர்கள் சிலர் வாகனத்தில் மதுரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது மதுரை அவனியாபுரம் – வளையங்குளம் ரிங் ரோடு பகுதியில் வாகனம் வந்தபோது, மறைந்திருந்த மர்ம கும்பல் வாகனத்தின் மீது பயங்கரமான முறையில் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த தாக்குதலில் வாகனம் தீப்பற்றி எரிந்ததில், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர், 13 நபர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமர் பாண்டி, மணிகண்டன், கார்த்திக், முத்து விஜய், சந்திரசேகர், சோனௌயா, நாகராஜ், முத்துக்கருப்பன், மோகன், விக்கி, சந்தோஷ் ஆகிய 11 பேரை கைது செய்து. பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக, இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்திலிருந்து கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேரில் ராமர் பாண்டி கடந்த 2024 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு உயிரிழந்து விட்டார், மேலும் முத்து விஜய் கடந்த 2013ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு உயிரிழந்துவிட்டார், இருவர் உயிரிழந்த நிலையில் 9 பேர் விசாரணையில் உள்ளனர்.
கடந்த மார்ச் 23ஆம் தேதி வழக்கு கரூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது 9 நபர்களும் குற்றவாளிகள் என அறிவித்து தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து 3 முறை தண்டனை விவரங்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று கரூர் நீதிபதி இளவழகன் தண்டனை விவரங்களை அறிவித்தார் அதில் ஒன்பது நபர்களும் சாகும் வரை சிறை தண்டனையும் மற்றும் ஒவ்வொரு நபருக்கும் பல்வேறு பிரிவு வழக்குப் பதிவின் கீழ் தலா 27 லட்சத்து 90 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டு நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினர்.
