குரகானில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக மஹக்(27) என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் ஆடிடிங் வேலை செய்து வரும் அன்சுல் தவானுக்கும் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி வெறும் 5 மாதங்களுக்குள் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. பிப். 15ம் தேதி மனைவியை காரில் தொலை தூரம் அழைத்துச் செல்வதாகக் கூறி அன்சுல் சென்றுள்ளார். அவர்கள் புறப்பட்ட 4 மணி நேரத்துக்குள் அன்சுல் காவல்துறைக்கு போன் செய்து, ஒரு கொள்ளைக் கும்பல் மனைவியைக் கொன்றுவிட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார். விரைந்து சென்ற காவல்துறை மஹக்கின் உடலைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்கு அனுப்பிவிட்டு விசாரணையை துவங்கினர். அன்சுலிடம் சம்பவம் நடந்தது பற்றி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் ஏற்பட்டு போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையில் இறங்கினர்.
இறுதியில் அன்சுல் மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மனைவி மீது சந்தேகம் இருந்ததாகவும், அவ்வப்போது இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படும் என்றும் சம்பவத்தன்றும் வாக்குவாதம் முற்றியதில், மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு கொள்ளை நடந்தது போல நாடகமாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொலை நடந்தபோது மஹக் கர்ப்பிணியாக இருந்தார் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

