தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவேகானந்தர் காலனி கடற்கரை பகுதியில், இலங்கைக்கு சட்டவிரோதமாகப் பொருட்கள் கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில், தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் கடற்கரைப் பகுதியில் சோதனை செய்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் பதிவு எண் இல்லாத பைபர் படகு ஒன்று நின்றுகொண்டிருந்தது. அந்த படகைச் சோதனை செய்ததில், சுமார் 34 மூட்டைகளில் தலா 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பீடி இலைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் எனத் தெரிகிறது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்ட அதிவேக பைபர் படகு மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், திரேஸ்புரத்தைச் சேர்ந்த சம்சுதீன் (39) மற்றும் தாளமுத்துநகரைச் சேர்ந்த சுடலைமணி (23) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லோடு வாகனத்துடன் தப்பி ஓடிய சில மர்ம நபர்களைப் போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், படகு மற்றும் பிடிபட்ட இரண்டு நபர்களையும் கியூ பிரிவு போலீசார் மேல் நடவடிக்கைக்காகத் தூத்துக்குடி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடற்கரை கிராமங்களில் இரவு நேரங்களில் போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனை கடத்தல் கும்பலிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

