₹23,600 கோடி ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை ரத்து செய்த பம்பாய் உயர்நீதிமன்றம்
2012-ல் விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டணத்திற்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி.
இந்திய தொலைத்தொடர்பு துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய தீர்ப்பை பம்பாய் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களான Airtel மற்றும் Vodafone Idea மீது மத்திய அரசு விதித்திருந்த ஒருமுறை ஸ்பெக்ட்ரம் (One-Time Spectrum Charge) கட்டணத்தை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பு இரண்டு நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய நிதி நிவாரணமாக பார்க்கப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு மத்திய அரசு, 6.2 MHz-ஐ விட அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்தது. மேலும், இந்த கட்டணம் 2008 முதல் அமலுக்கு வரும் வகையில் பின்னோக்கி (Retrospective) விதிக்கப்பட்டது. இதற்கு Airtel மற்றும் Vodafone Idea கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை அணுகின.
வழக்கை விசாரித்த பம்பாய் உயர்நீதிமன்றம், தொலைத்தொடர்பு உரிமங்கள் (Telecom Licences) ஒப்பந்த அடிப்படையிலானவை என்றும், பல ஆண்டுகளுக்கு பிறகு அவற்றின் நிதி விதிமுறைகளை அரசு ஒருதலைப்பட்சமாக மாற்ற முடியாது என்றும் தெளிவுபடுத்தியது. மேலும், அரசுக்கு பின்னோக்கி கட்டணங்களை விதிக்கும் அதிகாரம் இல்லை எனக் கூறி, 2012-ல் வெளியிடப்பட்ட அரசின் உத்தரவுகளையும், அதனை அடிப்படையாகக் கொண்டு அனுப்பப்பட்ட அனைத்து கோரிக்கை நோட்டீஸ்களையும் ரத்து செய்தது.
இந்த வழக்கில் மொத்தமாக சுமார் ₹23,600 கோடி அளவிலான ஸ்பெக்ட்ரம் கட்டணங்கள் தொடர்பாக சர்ச்சை நிலவி வந்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் Airtel மற்றும் Vodafone Idea நிறுவனங்கள் மீது இருந்த மிகப்பெரிய நிதிச்சுமை நீங்கியுள்ளது. மேலும், தொலைத்தொடர்பு துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் சூழல் உருவாகும் என தொழில்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.
தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து பங்குச்சந்தையிலும் நேர்மறை தாக்கம் காணப்பட்டது. Airtel மற்றும் Vodafone Idea நிறுவனங்களின் பங்குகள் உயர்வு கண்டன. முதலீட்டாளர்கள் இந்த தீர்ப்பை தொலைத்தொடர்பு துறைக்கு சாதகமானதாக வரவேற்றுள்ளனர்.
இந்த தீர்ப்பு, எதிர்காலத்தில் அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் நிறுவனங்களின் உரிம ஒப்பந்தங்களுக்கு இடையிலான சட்ட வரம்புகளை தெளிவுபடுத்தும் முக்கிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது
