உடுப்பி: நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பாஜக எம்எல்ஏ கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த வாரம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் பிரபல நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் பங்கேற்றார். அப்போது ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை அவர் கடுமையாக விமர்சித்து பேசினார். இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக உடுப்பியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பங்கேற்று பேசிய பாஜக எம்எல்ஏ யாஷ்பால் சுவர்ணா, பிரகாஷ் ராஜை கடுமையாக எச்சரித்தார். அப்போது அவர், ‘நடிகர்களின் மனதில் நஞ்சை விதைப்பதை பிரகாஷ் ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாக மாறுவார். வெளிநாட்டு நிதியுதவியைப் பெற்றுக்கொண்டு நாட்டில் வன்முறையைத் தூண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முயல்கிறது. ஜந்தர் மந்தரில் நடந்த நீட் தேர்வு தொடர்பான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உண்மையான மாணவர்கள் அல்ல; அவர்களின் பின்னணியைச் சோதித்தால் உண்மை வெளிவரும். இத்தகைய அரசியலைத் தொடர்ந்தால் பாஜக தொண்டர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்’ என்று எச்சரித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘இந்தியா’ கூட்டணியின் தலைவர்களான ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோரின் முகங்களுடன் கரப்பான்பூச்சி படங்கள் ஒட்டப்பட்ட விளம்பரப் பலகைகள் மீது தலைவர்கள் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளித்து தங்களது எதிர்ப்பைப் பதிவிட்டனர்.
