திருச்சி எடமலைப்பட்டி புதூர் பட்டாலியன் மெயின் கேட் அருகில் மர்ம ஆசாமி ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எடமலைப்பட்டி புதூர் போலீசார் அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ராம்ஜிநகர் மில் காலனி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (42) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போன்று திருச்சி – திண்டுக்கல் சாலையில் கோரையாற்று பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த ராம்ஜி நகரை சேர்ந்த ஹரிஹரன் (42) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேற்கண்ட 2 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுதலை செய்தனர்.

