பார்சல் அலுவலகத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு…வாலிபர் கைது
திருச்சி மே 17- திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 42) இவர் அப்பகுதியில் பார்சல் பொருட்களை டெலிவரி செய்யும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று சபிக் ராஜா என்பவர் அவரின் கடைக்கு வந்து மோட்டார் சைக்கிளை பார்சல் செய்து அனுப்புவதற்காக கொடுத்துள்ளார். பின்னர் பாலமுருகன் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 11 ந்தேதி அன்று காலை பாலமுருகன் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் ஏர்போர்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மோட்டார் சைக்கிள் திருடியது இந்த கடையில் வேலை பார்க்கும் ஏர்போர்ட் காமராஜ் நகரை சேர்ந்த தினேஷ்குமார் 27 டிரைவர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தினேஷ் குமாரை கைது செய்தனர்.
காந்தி மார்க்கெட்டில் காரை சேதப்படுத்தியவர் கைது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மாலை மாரியம்மன் நகரை சேர்ந்தவர் சக்தி வெங்கடேஷ் ( வயது 32) இவர் சம்பவத்தன்று காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டிற்கு தனது எலக்ட்ரிக் காரில் வந்துள்ளார் பின்னர் அவர் அப்பகுதியில் தனது காரை நிறுத்தி விட்டு மீன் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த திருச்சி அரியமங்கலம் ஜோதி நகர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 28) என்பவர் காரை அந்த பகுதியில் விட்ட சக்தி வெங்கடேசனிடம் இது குறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் சக்தி வெங்கடேஷை தகாத வார்த்தைகள் திட்டி தாக்கி காரை சேதப்படுத்தி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரணை கைது செய்தனர்.
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கைதி.. வேறு அறைக்கு மாற்றியதால் விபரீதம்
திருச்சி மத்திய சிறையில் ஏராளமான விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் உள்ளன இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி போலீசார் சிறை வளாகத்தில் சோதனை நடத்தினர். அப்பொழுது சிறை அறையில் இருந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நவீன் குமார் (வயது 23)என்ற கைதியை சோதனை செய்த போது அவர் கஞ்சா வைத்திருந்ததாக சிறைத்துறை போலீசார் மடக்கி பிடித்தனர். பிறகு கைதி நவீன்குமாரை
19ஆவது அறையில் இருந்து எண் 10க்கு மாற்றப்பட்டார். அதன் காரணமாக நேற்று மாலை நவீன் குமார் சிறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து குளியல் அறை ஓடுகளை உடைத்து தன்னைத்தானே கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அவரது மார்பு, வயிறு மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டது.
இதையடுத்து நவீன் குமார்க்கு சிறை மருத்துவமனையில் வெளிநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது இந்த சம்பவ குறித்து சிறைத்துறை அதிகாரி ராஜேஷ் கண்ணன் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் நவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த முதியவர் கைது
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் வந்த பயணிகள் வெளியே வந்த பொழுது அவர்களை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு முதியவரின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். மேலும் அந்த முதியவர் யிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது அவர் பெயர் முத்துசாமி (வயது 60) சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர் பிறந்த தேதி மற்றும் ஊரை மாற்றி போலி பாஸ்போர்ட் தயாரித்து அதன் மூலம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இமிகிரேஷன் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துசாமியை கைது செய்துள்ளனர்.
