கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் சி.பி.ஐ. விசாரணை தற்போது தீவிர வேகமெடுத்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில், சி.பி.ஐ. ஏ.எஸ்.பி. முகேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி முதல் கரூரில் உள்ள தாந்தோன்றி மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு அருகே அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி சி.பி.ஐ. அதிகாரிகள்

விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், போலீசார், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், இன்று சி.பி.ஐ. விசாரணை மேலும் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தடயவியல் துறை அதிகாரிகள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர் அதனைத் தொடர்ந்து உயர்ரக உயர் தொழில்நுட்ப கேமிராக்களை பயன்படுத்தி சாலையை அளந்து ஒயிட் பவுடர் மூலம் கோடிட்டு

அதனை குறித்து அளவீடு செய்யும் பணியினை வீடியோ போட்டோ மூலம் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த ஆய்வு மூலம் சம்பவ நேரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், உயிரிழப்புகளின் காரணங்கள், மீட்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குறைபாடுகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், கரூர் துயர சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணை நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை எடுத்து, முக்கிய முடிவுகளை நோக்கி நகர்ந்து வருவதாகக் கருதப்படுகிறது.

