Skip to content

குழந்தையைப் பார்க்க மனைவி அனுமதி மறுப்பு: செங்கல்பட்டு அரசு டாக்டர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (37). இவர் செங்கல்பட்டு நகர் பகுதியில் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவு மருத்துவராகவும் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவரது மனைவி கேரளாவில் மருத்துவ உயர்படிப்பு படித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இது தொடர்பாக அவரது மனைவி நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். இதற்கிடையே, தனது 3 வயது மகளைப் பார்ப்பதற்காக டாக்டர் கார்த்திக் மிகுந்த ஆசையுடன் ஊருக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு குழந்தையைப் பார்க்க மனைவி தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதனால் கடும் மனமுடைந்த கார்த்திக் செங்கல்பட்டுக்கு திரும்பியுள்ளார். அன்று முதல் யாரிடமும் சரியாகப் பேசாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அவர், நேற்றிரவு தனது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார், கார்த்திக்கின் உடலைக் கைப்பற்றி அவர் பணியாற்றிய அதே மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சக மருத்துவர் ஒருவரே குடும்பப் பிரச்சனை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!