Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏப்ரல் 5 முதல் சென்னை புறநகர் ரயில்கள் சீராக இயக்கம்

சென்னை எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் நிறைவடைய உள்ளதால் திட்டமிட்டபடி வரும் 5-ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவைகள் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருவதன் காரணமாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு எழும்பூர் வழியாக நாளொன்றுக்கு இயக்கப்பட்டு வந்த 204 மின்சார ரயில் சேவைகள் பாதியாக குறைக்கப்பட்டது.

இதனால் புறநகர் பகுதிகளில் இருந்து அன்றாடம் பணிக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி & கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால் திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு நோக்கி செல்லும் மற்றும் வரும் புறநகர் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் ரூ.820 கோடி செலவிலான மறுசீரமைப்புப் பணிகள் துவக்கப்பட்டு, அந்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக புறநகர் மின்சார ரயில்கள் வந்து செல்லும் நடைமேடை 10, 11 ஆகியவற்றும் அமைக்கப்பட்டுள்ள தண்டவாளங்களில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ஏப்ரல் 5-ஆம் தேதி வரை 5, 6 ஆகிய நடைமேடைகளில் இருந்து புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி ரயில்கள் சீராக இயக்கப்படவில்லை. இதன் காரணமாக ரயில்களில் பயணிக்க நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்து, கடும் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டியிருந்தது. தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் அது எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.

எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பால அடித்தளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதால், திட்டமிட்டபடி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கமான அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறிப்பிட்ட புறநகர் வழித்தடத்தில் தினசரி பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.

error: Content is protected !!