தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின் டெல்லி செல்லவுள்ள முதல்வர் விஜய், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி, வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களையும் முதல்வர் விஜய் சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, டில்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் முதல்வர் தங்கும் அறை , ஆலோசனை அரங்கம் உள்ளிட்ட பகுதிகளை புதுப்பிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக டெல்லிக்கு செல்லவுள்ள விஜய்க்கு தமிழர் பாரம்பரிய முறையில் சிறப்பு வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக, தமிழ்நாட்டில் இருந்து அரசு அதிகாரிகள், டில்லிக்கு பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் விஜய் அடுத்த வாரம் டில்லிக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
