முதல்-அமைச்சர் விஜய், இன்று மாலை திருச்சியில் உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில், இன்று காலை முதலே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் (01.06.2026) இன்று திருச்சிராப்பள்ளி மாநகரத்திற்கு வருகை புரிவதால் காலை 10.00 மணி முதல் மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருவெறும்பூரிலிருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் மாநகர பேருந்துகள் அனைத்தும் மரக்கடை வழியாக மெயின்கார்டுகேட் காந்தி சிலை அருகில் பயணிகளை இறக்கி விட்டு மேல அரண்சாலை (W.B) வழியாக செல்ல வேண்டும்.
திருவாணைக்கோவில் வழியாக வரும் பேருந்துகள் அனைத்தும் மாம்பழசாலையில் இறக்கி விட்டு திரும்பி செல்ல வேண்டும். கரூர் சாலையிலிருந்து வரும் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் கே.டி சந்திப்பு, சாஸ்த்திரி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். கடலூர், பெரம்பலூர், அரியலூரிலிருந்து வரும் பேருந்துகள் திருவாணைக்கோவில் வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் கொள்ளிடம் புறவழி சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்ல அனுமதியில்லை.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் 01.06.2026 அன்று திருச்சிராப்பள்ளி மாநகரத்திற்கு வருகை புரிவதால் காலை 07.00 மணி முதல் மதுரையிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் துவரங்குறிச்சியிலிருந்து மணப்பாறை, குளித்தலை, முசிறி பெரம்பலூர் வழியாகவும், திண்டுக்கலிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் மணப்பாறையிலிருந்து குளித்தலை, முசிறி, பெரம்பலூர் வழியாகவும், சென்னையிலிருந்து மதுரை, திண்டுக்கல் செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூரிலிருந்து, அரியலூர் வழியாக செல்ல வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் வழியாக செல்ல வேண்டும். தஞ்சாவூரிலிருந்து கரூர் செல்லும் கனரக வாகனங்கள் அரியலூர், பெரம்பலூர், துறையூர் வழியாக செல்ல வேண்டும். கரூரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் கனரக வாகனங்கள் குளித்தலை, முசிறி, பெரம்பலூர், அரியலூர் வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தயாள் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
