வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா தலையிட்டு தரவுகளைத் திருடியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி தலைவரான அதிபர் டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சார்பில் நீதிமன்றங்களில் 60 வழக்குகள் தொடரப்பட்டன.
ஆனால், தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடிய அளவிலான எந்தவொரு மோசடியும் நடக்கவில்லை என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. மேலும், பல்வேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட வாக்கு மறுமதிப்பீடு, தணிக்கை மற்றும் டிரம்பின் சொந்த நீதித்துறை அமைச்சகம் நடத்திய விசாரணைகளிலும் தேர்தல் மோசடி குறித்த எந்தவொரு ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
