வானில் பறந்த கோவை ஆட்சியர் : ‘பாரா மோட்டாரிங்’ மூலம் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு !!!
கோவை, செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் அதிரடி சாகசம் ; மாவட்ட தேர்தல் அலுவலரின் துணிச்சலான முயற்சியால் பொதுமக்கள் நெகிழ்ச்சி !!!
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்திப் பல்வேறு நூதன விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு

வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சித்த லைவர் பவன்குமார் ‘பாரா மோட்டாரிங்’ (Para Motoring) மூலம் வானில் பறந்து வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
கோவை எல் அண்ட் டி (L&T) பைபாஸ் சாலையில் உள்ள செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் இந்த பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சித்தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் பவன்குமார், சாகச வீரர்களைப் போலப் பாரா ரைடிங் உபகரணங்கள் மற்றும் ராட்சச பலூன் மூலம் வானில் பறந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
வானில் பறந்தபடி, 100% வாக்களிப்பதன் அவசியம் மற்றும் ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டார்.
பொதுவாக அதிகாரிகள் மேடைகளில் பேசும் விழிப்புணர்வை விட, ஒரு மாவட்டத்தின் உயரிய பொறுப்பில் இருப்பவர் நேரடியாகச் சாகசத்தில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.
அங்கிருந்த அனைவரும் ஆட்சியரின் இந்தத் துணிச்சலான முயற்சியைப் பாராட்டினர்.
“வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, தலையாய கடமையும் கூட. கோவையில் ஒரு வாக்கு கூட வீணாகக் கூடாது என்பதே எங்களது இலக்கு. இதற்காகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் இதுபோன்ற நவீன விழிப்புணர்வு உத்திகளைக் கையாண்டு வருகிறோம்,” என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

