கோவை சஹோதயா 10வது வருடாந்திர விளையாட்டுப் போட்டியில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். தடகளப் போட்டியில் இப்பள்ளியின் மாணவ, மாணவிள் சிறப்பான தனிநபர் செயல்பாடுகளை வெளிப்படுத்தினர்.
12 ஆம் வகுப்பைச் சேர்ந்த பி.நினாத், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 1,500 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஓட்டம் ஆகிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தார். 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த எஸ்.ஆஸ்வின் சாமுவேல், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளிலும் சாதனை படைத்தார். 11 ஆம் வகுப்பைச் சேர்ந்த ஜோஷிதா பி ஐயர், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் வெற்றி

பெற்றதுடன், ஈட்டி எறிதலில் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த பி.ஹரிணி, 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் உயரம் தாண்டுதல் போட்டியில் சாதனை படைத்து வெற்றி பெற்றதுடன், 100 மீட்டர் தடை தாண்டும் போட்டிகளிலும் வெற்றி பெற்றார். அதோடு தனது சிறப்பான செயல்பாட்டிற்காக தனிநபர் சாம்பியன்ஷிப் விருதையும் அவர் பெற்றார்.
11 ஆம் வகுப்பைச் சேர்ந்த கிரேஸ் ஏஞ்சல், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தினார்.
இப்பள்ளி தடகள வீரர்கள் சிறப்பான ஆட்டங்கள் மூலம் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ‘ஒட்டுமொத்த சாம்பியன்’ பட்டத்தை வென்று அசத்தியது. இந்தச் சாதனை, மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் உறுதியான மனப்பான்மையை வெளிப்படுத்தியது.
ஸ்டேன்ஸ் பள்ளி தொடர் ஓட்டப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு, 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதலிடத்தையும், 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பிடித்தது.
பள்ளியின் விளையாட்டுச் சாதனைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, கோவையில் உள்ள எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்ட் பள்ளி நடத்திய கோவை சஹோதயா பள்ளிகளுக்கிடையேயான கூடைப்பந்துப் போட்டியில், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் கூடைப்பந்து அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
