திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் 48 வயதான தொழிலாளி. இவரது 17 வயது மகன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு சரிவர செல்லவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த தொழிலாளி தனது மகனை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு தந்தை-மகன் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது நடந்த தகராறில் ஆத்திரம் அடைந்த மகன், அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து தந்தையின் தலையில் அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரிக்கு செல்லாததை கண்டித்த தந்தையை சிறுவன் பீர் பாட்டிலால் தலையில் அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
