Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலை விபத்தில் கல்லூரி மாணவர் மூளைச்சாவு.. உடல் உறுப்புகள் தானம்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்ற மாணவர் அருள்ராஜ் (18), பட்டுக்கோட்டை அருகே உள்ள முதல்சேரி கிராமத்தைச் ஜோசப் ராஜ் – மெட்டில்டா தம்பதியின் மகன். இவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஏற்பட்ட சாலைவிபத்தில் தீவிரமாக பாதிக்கப்பட்டு, மருத்துவர்களின் முழு முயற்சி செய்த போதும் பலன் இன்றி மூளைச் சாவு அடைந்தார். இந்த பேரிழப்பின் நடுவிலும், அவரது குடும்பத்தினர் முடிவு எடுத்து அவருடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். இது சாதாரண முடிவு அல்ல அது மனிதநேயத்தின் உச்சநிலை என பொதுமக்கள் கூறினர்.

ஒரு உயிர் பிரிந்தாலும், பல உயிர்களுக்கு புதிய வாழ்வு தரும் இந்த செயல், உண்மையில் இறந்தும் உயிர்வாழும் என்ற சொல்லுக்கு உயிரூட்டுகிறது. உடல் உறுப்பு தானம் மூலம் – ஒரு உயிர் பல உயிர்களை காக்கிறது. நம் மரணத்திற்கு பின் உடல் மண்ணாகி விடும். ஆனால், அந்த உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால், பலர் உயிர் பிழைக்கலாம். இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் போன்றவை பலருக்கு வாழ்வின் புதிய வாய்ப்பை அளிக்கின்றன.

இன்று சாதாரண விவசாய கூலி வேலை செய்து வரும் ஜோசப் ராஜ் – மெட்டில்டா தம்பதி எடுத்த முடிவு மனிதநேயத்தின் உயர்ந்த பாதையை உலகிற்கு காட்டியுள்ளது. பல ஆயிரக்கணக்கான நோயாளிகள் மாற்று உறுப்புக்காக காத்திருக்கின்றனர், ஒரு தானம் பல உயிர்களை காப்பாற்றும், இது மதம், மொழி, சாதி எல்லாவற்றையும் தாண்டிய மனிதநேய செயல் என்றும், நம் மறைவிற்குப் பின்னும் நம் வாழ்வு தொடர ஒரே வழி இதுவே என்றும் கலந்து கொண்டவர்கள் மனமுருக பாராட்டினர் . உடல் உறுப்பு தானத்திற்கு பிறகு அவரது உடல் இன்று மாலை பட்டுக்கோட்டை முதல்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, உற்றார் உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர், அதன்பின் உடல்நல்லடக்கம் செய்யப்பட்டது. பட்டுக்கோட்டை அருகே விபத்தில் மூளை சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த மாணவன் அருள்ராஜ் உடலிற்கு காதர் முகைதீன் கல்லூரி முதல்வர் அல்ஹாஜி மற்றும் கோட்டாட்சியர் சங்கர் , திமுக மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல், அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சி.வி.சேகர் , திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

error: Content is protected !!