கரூர் வடக்கு காந்திகிராமம் திண்ணப்பா நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கரூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகி. இவரது மகன் சரண்ஜித் நிகில் (18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு அனிமேஷன் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்கள் 7 பேருடன் கரூர் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தில் உள்ள சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது கிணற்றில் குளித்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சரண்ஜித் நிகில் கிணற்றில் திடீரென மூழ்கினார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இதுகுறித்து அருகில் இருந்தவர்களுக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கிய சரண்ஜித் நிகிலை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரண்ஜித் நிகில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் கரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
