த.வெ.க கூட்டணிக்குள் இருக்கும் பிரச்னை போதாதென, புதிதாக ஒரு பஞ்சாயத்து வெடித்து டெல்லி வரை பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க அந்தக் கட்சி மல்லுக்கட்டும் நிலையில், “எங்கள் தளபதி விஜய்தான் அடுத்த பிரதமர்” என்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள் அமைச்சர்களும் த.வெ.க சீனியர்களும்.

அமைச்சர்கள் செங்கோட்டையனில் தொடங்கி ஜெகதீஸ்வரி வரை அந்தப் பட்டியல் நீள்கிறது.
முதல்வர் விஜய்யின் ஆட்சியை மாஸாகக் காட்டி வடமாநிலங்களில் பரவிவரும் ரீல்ஸ்களும், அதற்கேற்ப அமைச்சர்கள் உதிர்க்கும் வார்த்தை முத்துக்களும், த.வெ.க கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் கட்சியைக் கடும் டென்ஷனாக்கி யிருக்கிறது. “ரசிகர் மன்ற மனநிலையிலிருந்து அமைச்சர்கள் இன்னும் வெளிவரவில்லை” என்று காட்டமாகவே விமர்சித்திருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர்.
இந்தநிலையில் தூத்துக்குடியில் இன்றைய முதல்வர் நாளைய பிரதமர் என தவெக சார்பில் ஒட்டியுள்ள போஸ்டர்களால் காங்கிரசார் மேலும் கொதிப்பு அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) சார்பில் “இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் விஜய்” என்று வாசகங்கள் பொறிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால், அப்பகுதி காங்கிரஸ் கட்சியினர் கடும் கொதிப்படைந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடி மற்றும் தென் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், தவெக – காங்கிரஸ் தொண்டர்களிடையே காரசார விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
