மும்பையில் கனமழை பெய்ததால் சுமார் 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று இடம்பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் ஒரே பரபரப்பாக இருந்தது. மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக போவாய் ஏரி முழுமையாக நிரம்பி, வெள்ளநீர் வெளியேறியது. இந்த வெள்ளநீரோடு சேர்ந்து ஏரியில் இருந்த முதலைகளும் ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன. இதையடுத்து இன்று காலை மொரார்ஜி நகர் தர்கா மற்றும் நிட்டி பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் சுமார் 7 அடி நீள ராட்சத முதலை ஒன்று ஊர்ந்து சென்றது. இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து வனத்துறைக்கும், பிரஹன்மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு மீட்புக் குழுவினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து முதலையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்த முதலைக்கு எந்தவித காயமும் ஏற்படாதவாறு அதிகாரிகள் அதை சாதூரியமாகப் பிடித்துக் கூண்டில் அடைத்தனர்
தற்போது மீட்கப்பட்டுள்ள முதலைக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அதன் உடல்நிலை சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன், வனத்துறையின் வழிகாட்டுதலின்படி அது மீண்டும் அதன் இயற்கையான வாழ்விடத்தில் பாதுகாப்பாக விடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், பருவமழைக் காலங்களில் நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
