நத்தம் அருகே, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில் இன்றுகாலை மீண்டும் கறிவிருந்து வழங்கினர். இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பாத்திரங்களில் கறிவிருந்தை வாங்கிச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே, உலுப்பக்குடி கிராமத்தில் வேட்டைக்காரன் சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் கிராமத்தை சேர்ந்த தெற்கு தெரு மற்றும் வடக்கு தெரு மக்கள் சார்பில் விழா எடுக்கப்படும். ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த விழாவில் ஆடுகள் வெட்டப்பட்டு கமகம கறிவிருந்து தயாரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். கடந்த 23ம் தேதி தெற்கு தெரு பகுதி மக்கள் சார்பில் விழா எடுக்கப்பட்டு கிடா வெட்டி கமகம கறி விருந்து பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், வடக்கு தெரு பகுதி மக்கள் சார்பில் நேற்று விழா எடுக்கப்பட்டது. இதையொட்டி நேற்றிரவு வேட்டைக்கார சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 50 கிடாக்கள் பலியிடப்பட்டு 50 மூட்டை அரிசியில் விடிய விடிய கறி விருந்து தயாரிக்கப்பட்டது. பின்னர் வேட்டைக்காரன் சுவாமிக்கு கறிவிருந்து படைக்கப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இன்று காலை பக்தர்களுக்கு கறி விருந்து பிரசாதமாக வழங்கப்பட்டது.
அனைவரும் பாத்திரங்களில் வாங்கிச் சென்று குடும்பத்தாருடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இந்த விழாவில் உலுப்பக்குடி, காட்டுவேலம்பட்டி, குட்டூர், புன்னப்பட்டி, வேலாயுதம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

