அரியலூர் நகர் மேலத்தெருவில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஆலயத்திற்கு சித்திரை தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
சித்திரை தமிழ் வருடப்பிறப்பு தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் வருடப்பிறப்பு அன்று ஆண்டுதோறும் அரியலூர் நகர் மேலத்தெருவில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி என்கிற பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இதன்படி இன்று அரியலூர் செட்டிய ஏரிக்கரையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து நீண்ட அழகு குத்தியும் பால்குடம் எடுத்தும் பக்தர்கள் முக்கிய

வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள், விரதம் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பாலால் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின்னர் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு புத்தாடைகள்

அணிவிக்கப்பட்டு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
