திருச்சி மாநகராட்சி 64வது வார்டுக்கு உட்பட்ட கே கே.நகர் உடையான்பட்டி விக்னேஷ் நகரை சேர்ந்தவர் வேலுசாமி (32 ). இவர் ஏர்போர்ட் பகுதி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவதை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக உடையான்பட்டி பகுதியில் நிர்வாகிகளுடன் வேலுசாமி வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வந்தார். அப்பொழுது ஷேசாய் நகர் பகுதியில் நிர்வாகிகள், தொண்டர்களுடன் வேலுசாமி வந்த பொழுது அந்த பகுதியில் உள்ள சிவக்குமார் (64) என்பவர் தமிழக வெற்றி கழகத்தை பற்றி விமர்சனம் செய்து பேசியதாக கூறப்படுகிறது இதனால் பிரச்சாரம் செய்ய வந்தவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த சிவக்குமார் பிரச்சாரக் கூட்டத்தில் இருந்த ஒரு பெண்ணை தாக்கி விட்டார். இந்த சம்பவத்தில் காயமடைந்த அந்த பெண் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வேலுசாமி ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் சிவக்குமார் மீது வழக்கு பதிந்து உள்ளனர். இதற்கிடையில் சிவக்குமார் ஏர்போர்ட் போலீசில் மற்றொரு புகார் கொடுத்துள்ளார் அந்த புகாரில் வேலுசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரத்தின் போது தன்னை தரக்குறைவாக பேசி கொடிக்கம்பத்தால் தாக்கி விட்டனர் என்று கூறியுள்ளார். இதையடுத்து வேலுச்சாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
