தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணைய நடைமுறைப்படி, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் தலா 9 கண்காணிப்பு குழுக்களும், 9 பறக்கும் படையும் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா மற்றும் கொண்டு செல்லப்படுகிறதா என அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரியலூரிலிருந்து திருமானூர் செல்லும் சாலையில், அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கரின் வாகனம் இன்று காலை சென்றது. அப்போது கீழப்பழுவூர் அருகே சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர் நிர்மல்ராஜ் தலைமையிலான குழுவினர், அவ்வழியாக வந்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் வாகனத்தை சோதனை செய்தனர்.
பறக்கும் படையினரின் சோதனைக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். சோதனையில் பணம் மற்றும் பரிசுப் பொருள் எதுவும் இல்லாததால் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் வாகனத்தை செல்ல தேர்தல் பறக்கும் படையினர் அனுமதித்தனர்.

