Skip to content

மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம்: ஆவடியில் மின்வாரிய அதிகாரி அதிரடி கைது

ஆவடியில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி, ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த ராகவன் (47) என்ற விவசாயி, தனது புதிய வீட்டிற்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன் (47), மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சமாகத் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராகவன், திருவள்ளூர் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் இது குறித்துப் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனப் பொடி தடவிய ரூ.15,000 பணத்தை ராகவன் இன்று கோவில்பதாகை மின்வாரிய அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று பாலசுப்ரமணியனிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார், லஞ்சப் பணத்தை வாங்கிய பாலசுப்ரமணியனை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!