திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் சிறுநகர் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (43). பூ வியாபாரி. இவரது மனைவி சிவசங்கரி (34), ஆற்காடு சாலையில் ரத்தப் பரிசோதனை நிலையம் வைத்துள்ளார். இவர்களுக்கு மனோ பாலாஜி (16) என்ற மகனும் நிவ ஸ்ரீ (12) என்ற மகளும் உள்ளனர்.
மனோபாலாஜி வெளியூரில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வெளியூரில் படிக்கும் மகன் மனோ பாலாஜி நேற்று மாலை பள்ளி கடைசி நாள் என்பதால் தன்னை அழைத்துச் செல்வதற்காக பெற்றோரை வரச் சொல்ல போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் தாயார் சிவசங்கரி, தந்தை கோடீஸ்வரன் இருவரும் போனை எடுக்கவில்லை. நீண்ட நேரமாகியும் போனை எடுக்காததால் அவரது தாய் மாமாவிற்கு மனோ பாலாஜி போன் செய்து “அப்பாவும் அம்மாவும் அழைப்பை எடுக்கவில்லை. என்னவென்று பாருங்கள்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சிவசங்கரியின் தந்தை வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகள் சிவசங்கரி கீழே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மருமகன் கோடீஸ்வரனும் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார். நேற்று மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோடீஸ்வரன் தாக்கியதில் சிவசங்கரி இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன கோடீஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
