பிரண்டு சாட் ஆப் மூலம் பழகி வேலாயுதம்பாளையத்திற்கு இளைஞரை அழைத்து கத்தியை காட்டி நகை பறித்த பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் விநாயகர் நகர் கீழரத வீதியைச் சேர்ந்த கதிரவன் (60) அவர்களின் மகன் தினேஷ் (34). இன்ஜினியரிங் படித்த இவர், தற்போது திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். தினேஷ் ‘பிரண்டு சாட்’ செயலி மூலம் பலருடன் பழகி வந்துள்ளார். அந்த வழியில் காயத்ரி (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். இந்த நிலையில், காயத்ரி மூன்றாவது கணவர் மற்றும் அவரின் நண்பரான கார்த்தி (29), சஞ்சய் (19), சூர்யா (19) ஆகியோருடன் சேர்ந்து தினேஷை ஏமாற்றி நகை, பணம் பறிக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வாடகை வீடு எடுத்து ஒரு வாரமாக தங்கி இருந்தனர்.
காயத்ரி, தினேஷை வேலாயுதம்பாளையம் வருமாறு அழைத்துள்ளார். அதை நம்பி தினேஷ் அங்கு சென்றார். பின்னர் காயத்ரி தங்கி இருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பேசிக் கொண்டிருந்த போது திடீரென கார்த்தி, சஞ்சய், சூர்யா ஆகியோர் வீட்டுக்குள் நுழைந்து, கத்தி மற்றும் அரிவாளால் மிரட்டி தினேஷிடம் இருந்த 2½ பவுன் தங்கச் செயின், 1 பவுன் தங்க மோதிரம் மற்றும் ரூ.1000 பணத்தை பறித்துள்ளனர். பின்னர் ஒரு ஆட்டோவில் ஏற்றி கரூர் நோக்கி அழைத்து சென்று, நடந்த சம்பவத்தை வெளியிடக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்து வழியிலேயே இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து தினேஷ் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஏமாற்று கும்பலை சேர்ந்த நான்கு பேரும் கரூர் அருகே பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் காயத்ரி முன்பு இரு திருமணங்கள் செய்து தற்போது மூன்றாவது திருமணம் செய்து கார்த்தி என்பவருடன் குடும்பம் நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பசுபதிபாளையம் பகுதியில் சோதனை நடத்திய போலீசார் காயத்ரி, கார்த்தி, சஞ்சய், சூர்யா ஆகியோரை கைது செய்து, 2½ பவுன் தங்கச் செயின் மற்றும் 1 பவுன் தங்க மோதிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் வேறு யாரையாவது ஏமாற்றி பணம் நகை பறித்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் நான்கு பேரையும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று ஆண்கள் திருச்சி மத்திய சிறையிலும், காயத்ரி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
