தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க, 118 எம்.எல்.ஏ.,கள் ஆதரவு வேண்டும். அதன்படி, த.வெ.க.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க, வேறு கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
த.வெ.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் ததேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் விஜய் வலியுறுத்தி உள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் 14 நாட்கள் அவகாசம் கேட்டு உள்ளார்.
தவெகவுக்கு இப்போது காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவு கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது மட்டும் போதாது என்பதால், பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் இருந்து ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியுடன் தவெக தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உடன் நடைபெறும் பேச்சுவார்த்தையிலே ஒரு முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் துணை முதல்வர் பதவியை தனது மனைவி சவுமியா அன்புமணிக்கு வழங்க வேண்டும் என அன்புமணி கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விஜய் ராஜினாமா செய்ய உள்ள ஒரு தொகுதியையும் பாமக கோரியுள்ளது. ஐந்து தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற ஒரு கட்சி தவெக-வின் நெருக்கடியான சூழ்நிலையை உணர்ந்து பெரிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. இது தவெக தரப்பு ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
