ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு
செயற்கை நுண்ணறிவு போட்டியில் அதிரடி… 80 பில்லியன் டாலர் முதலீட்டை அறிவித்த Alphabet!
செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளாவிய போட்டி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், Google நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet மிகப்பெரிய முதலீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. AI தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தரவு மையங்களை விரிவுபடுத்தும் நோக்கில் 80 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்டும் நடவடிக்கையில் நிறுவனம் இறங்கியுள்ளது. இந்திய மதிப்பில் இந்த தொகை ரூ.6.8 லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.
Alphabet நிறுவனம் இந்த நிதியை புதிய AI தரவு மையங்கள், உயர் திறன் கணினி வசதிகள் மற்றும் Gemini போன்ற அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு சேவைகளை மேம்படுத்த பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் AI சேவைகளுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருவதால், தற்போதுள்ள உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிதி திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான Berkshire Hathaway சுமார் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் Alphabet நிறுவனத்தின் AI வளர்ச்சி திட்டத்திற்கு முக்கிய ஆதரவு கிடைத்துள்ளது.
Google நிறுவனம் ஏற்கனவே 2026 ஆம் ஆண்டுக்கான மூலதன செலவினத்தை 180 முதல் 190 பில்லியன் டாலர் வரை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செலவினங்களில் பெரும்பாலானவை AI உள்கட்டமைப்பு, கிளவுட் சேவைகள் மற்றும் தனிப்பயன் AI சிப்கள் உருவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் Cloud பிரிவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 63 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
OpenAI, Anthropic, Microsoft மற்றும் Amazon போன்ற நிறுவனங்களுடன் கடுமையான போட்டி நிலவும் நிலையில், Alphabet தனது முன்னணியை தக்கவைத்துக்கொள்ள இந்த அதிரடி முதலீட்டை மேற்கொண்டுள்ளது. AI துறையில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக தொடர்வதற்காக அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்படலாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Google-ன் Gemini AI, Cloud AI சேவைகள் மற்றும் தனிப்பயன் Tensor Processing Unit (TPU) சிப்களுக்கு உலகளவில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக கணினி திறன் மற்றும் தரவு மைய தேவைகள் பல மடங்கு உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு துறையில் உலகின் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாக இந்த 80 பில்லியன் டாலர் திட்டம் பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப உலகின் கவனம் தற்போது Google மற்றும் அதன் AI வளர்ச்சி திட்டங்கள் மீது திரும்பியுள்ளது.
