திருவண்ணாமலை மாவட்டம் , ஆரணி அருகிலுள்ள முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி (84) தனியாக வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சாரங்கபாணியின் பேரன் சௌந்தர் சென்னை நகரில் உள்ள முருகப்பா நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை இழந்ததால் அவர் மனஅழுத்தம் மற்றும் விரக்தியில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்த சௌந்தர், தனது பாட்டியும் சாரங்கபாணியின் மனைவியுமான வேண்டாவரம் புகைப்படத்தை தீயிட்டு எரித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டு தாத்தா சாரங்கபாணி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறு கொடூரமான திருப்பத்தை எடுத்தது. கோபத்தில் ஆவேசமடைந்த பேரன், தாத்தாவின் மீது ஆசிட் ஊற்றி, பின்னர் கத்தியால் சரமாரியாக தாக்கி, அவரது அந்தரங்க உறுப்புகளை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்ததும் பெரணமல்லூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியான சௌந்தரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

