பிரபல ஹாலிவுட் நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பென் ஜோன்ஸ் மாரடைப்பு காரணமாக காலமானார். அமெரிக்க தொலைக்காட்சி தொடரான ‘தி டியூக்ஸ் ஆஃப் ஹஸார்ட்’ தொடரில் நடித்து பிரபலமான நடிகரும், ஜார்ஜியா மாகாணத்தின் 4வது நாடாளுமன்ற தொகுதியில் இரு முறை வெற்றி பெற்று எம்பியாக பதவி வகித்தவருமான பென் ஜோன்ஸ் (84), தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உயிர் பிரிந்ததாக அவரது மனைவி அல்மா வியேட்டர் சமூக வலைதளப் பதிவில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘என் வாழ்வின் அன்பான கணவரை இழந்துவிட்டேன். மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. அவர் அனைவருக்கும் பிடித்தமான மிகவும் அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்தார்’ என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
இவரது மறைவு செய்தி அறிந்து சக நடிகரான டாம் வோபட் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘எங்கள் டிவி தொடரின் முக்கிய தூணாக விளங்கிய மிகச் சிறந்த நண்பரை இழந்துவிட்டோம்’ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
