Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கர்நாடகாவில் கொடூரம்: மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்று கார் ஏற்றிய கணவன்

கர்நாடக மாநிலம் கலபுரகி அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்று அவர் மீது கார் ஏற்றிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி பகுதியைச் சேர்ந்த அக்ஷயா மனைவி சாகேலி (26). இவர்களுக்குள் கடந்த சில காலமாக குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர்கள் இருவரும் மகாராஷ்டிராவிலிருந்து கர்நாடகாவில் உள்ள தேவல் கானாப்பூர் கோயிலுக்கு நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கலபுரகி மாவட்டம் அப்சல்பூர் தாலுகாவில் உள்ள பலுர்கி கிராமத்தின் எல்லைப் பகுதியில் பிரதான சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, தம்பதியிடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த அக்ஷயா, காரை ஓரமாக நிறுத்தி சாகேலியை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினார். பின்னர் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் சாகேலியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். அதோடு நிறுத்தாமல், கீழே விழுந்த சாகேலியின் உடல் மீது காரை ஏற்றி சிதைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்த கொடூரச் செயலை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணைக் காப்பாற்றாமல், பலரும் வேடிக்கை பார்த்தபடி வீடியோ எடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அப்சல்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாகேலியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் போலீசார் அங்கு ஆதாரங்களைச் சேகரித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அக்ஷயாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இக்கொலைக்குக் காரணம் குடும்பத் தகராறு எனத் தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!