சென்னை: நீட் தேர்விற்கு எதிராக போரட்டம் நடத்தும் மாணவர்களுக்கு, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
விஜய் தலைமையிலான தவெக அரசு, ஒன்றிய அரசுக்கு நண்பன் போன்றே இருக்கிறார்கள்.. ஆனால் அதே நேரம் நீட் தேர்வுக்கு நாங்கள் எதிரானவர்கள் எனவும் பேசுகிறார்கள். இதை பார்த்தால் “பூனைக்கு நண்பன்; பாலுக்கு காவலன்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது என தவெக-வின் இரட்டை வேடம் குறித்து கடுமையாக விமர்சித்து உள்ளார்.
தொடர்ந்து பேசிய கிருஷ்ணசாமியிடம் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்கள் கைது செய்யப்படுவது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜனநாயகம் குறித்து படமெடுத்தால் மட்டும் போதாது, அது குறித்து முழுமையான புரிதல் வேண்டும். ஜனநாயகம் என்பது ஒரு வாழ்வியல் முறை; வெறுமனே பேசுவது, எழுதுவது மட்டும் ஜனநாயகமாக இருக்க கூடாது; வாழ்வே ஜனநாயகமாக இருக்க வேண்டும். அந்த வகையில் போராடும் உரிமையை இந்திய அரசியல் சாசனம், நம் குடிமக்களுக்கு வழங்கி இருக்கிறது. சிறிய அல்லது பெரிய என எப்படிப்பட்ட போராட்டமாக வேண்டுமானாலும் இருக்கலாம். மாணவர்கள் ஒரு கட்சிக்கு எதிராக ஒன்றும் போராடவில்லை, அவர்களின் உரிமைகளுக்காக தானே போராடுகிறார்கள். இந்த சூழலில் அவர்கள் போராடுவதை எதற்கு தடுக்க வேண்டும்.! எனவே உண்மையில் ஜனநாயகம் என்ற வெற்று வார்த்தை பேசுவது உதவாது; ஜனநாயகனாக வாழ வேண்டும் என முதல்வர் விஜய்யை சாடி உள்ளார் கிருஷ்ணசாமி.
