Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதல் மனைவி கழுத்தை நெரித்துக் கொன்று கணவர் தற்கொலை நாடகம்

காதல் மனைவி கழுத்தை நெரித்துக் கொன்று கணவர் தற்கொலை நாடகம்

திருப்பரங்குன்றத்தை அடுத்த கருவாட்டுப் பாறை பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான கோபிநாத். பார்விப்பட்டு எதிரே உள்ள தேவிநகர் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான விஜயலட்சுமி. இருவரும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் கோபிநாத்தின் வீட்டில் வசித்து வந்தனர். விஜயலட்சுமி கர்ப்பமான நிலையில், அவரது குடும்பத்தினரும் இருவரையும் ஏற்றுக்கொண்டு சமாதானமாகினர். இதையடுத்து, சுமார் 40 நாட்களுக்கு முன்பு தனிக்குடித்தனம் செல்வதாகக் கூறி, இருவரும் தேவிநகர் செக்கடி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினர்.

இந்நிலையில், கோபிநாத் அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்து விஜயலட்சுமியிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கோபிநாத், மனைவி விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றிய நிலையில், விஜயலட்சுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

மனைவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்தைத் தற்கொலையாகச் சித்தரிக்க கோபிநாத் திட்டமிட்டதாக தெரிகிறது. அதன்படி, விஜயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். மேலும், விஜயலட்சுமியின் சகோதரிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, விஜயலட்சுமி தூக்கிட்டு இறந்துவிட்டதாகக் கூறி கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து, விரைந்து சென்ற விஜயலட்சுமியின் சகோதரி 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த மருத்துவப் பணியாளர்கள், விஜயலட்சுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்ததுடன், உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், அக்கம் பக்கத்தினர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் விஜயலட்சுமியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், விஜயலட்சுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.

இதையடுத்து மருத்துவமனையில் திரண்ட விஜயலட்சுமியின் குடும்பத்தினர், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோபிநாத்தைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விஜயலட்சுமியை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை கோபிநாத் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

திருமணமாகி சில ஆண்டுகளே ஆன நிலையில் விஜயலட்சுமி உயிரிழந்ததால், இந்த சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு திருப்பரங்குன்றம் உதவி ஆணையர் சசிபிரியா பரிந்துரை செய்துள்ளார்.

காதல் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரால் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!