தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) இடையே தொகுதி பங்கீடு குறித்த இழுபறி தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள சிபிஎம் மாநில அலுவலகத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சென்றார்.சிபிஎம் அவசர செயற்குழு கூட்டம் நடந்து வரும் சூழலில் வைகோவின் இந்த வருகை கவனத்தை ஈர்த்தது. அவர் பொதுச்செயலாளர் பி.பி.பேபியை சந்தித்துப் பேசினார்.
வைகோ செய்தியாளர்களிடம் பேசியபோது, “மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பேபியை நண்பன் என்ற முறையில் சந்திக்க வந்தேன். மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் இருந்து அரசியல் கருத்துகளை கூற மாட்டேன். பேபி எனது சக உறுப்பினர் மட்டுமல்ல, என் மீது எல்லையற்ற அன்பு கொண்டவர். அவரை சந்தித்தேன்” என்று தெளிவுபடுத்தினார்.
திமுக – சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக வைகோ பேச்சுவார்த்தை நடத்த வந்ததாக சில தகவல்கள் வெளியான நிலையில், வைகோ அதை மறுத்தார். “பேபியை சந்திக்கவே வந்தேன். வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை” என்று அவர் வலியுறுத்தினார்.திமுக சிபிஎம்முக்கு 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தலைவிட கூடுதல் தொகுதிகள் கேட்பதில் சிபிஎம் உறுதியாக உள்ளது.
மாநிலச் செயலாளர் பி.சண்முகம் தலைமையிலான குழு, “கூடுதல் தொகுதிகள் கேட்பதில் நியாயம் இல்லை என்று திமுக கூறுவது ஏற்கத்தக்கதல்ல” என்று விமர்சித்து வருகிறது. மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.இன்று மீண்டும் திமுக – சிபிஎம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த இழுபறி திமுக கூட்டணியின் இறுதி வடிவத்தை பாதிக்கும் என்ற அச்சம் கூட்டணி தரப்பில் நிலவுகிறது. வைகோவின் வருகை இந்த பேச்சுவார்த்தைகளுக்கு பின்னணியில் ஏதேனும் பங்காற்றுகிறதா என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் ஆர்வம் எழுந்துள்ளது.
