Skip to content

அரசியலில் நான் யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை- முதல்வர்

முதல்வர் ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொளத்தூர் தொகுதியில் பல்வேறு முடிவுற்ற பணிகளை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6 புதிய ரேஷன் கடைகள், ரத்தி சுத்திகரிப்பு நிலையம், மறுவாழ்வு மையம் ஆகியவற்றை ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து கொளத்தூரில் நடந்து சென்று மக்களையும் சந்தித்தார்.
அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் பல்வேறு தரப்பு மக்களும் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனால் ஸ்டாலின் மட்டுமல்லாமல் அவருடன் இருந்த நிர்வாகிகளும் உற்சாகம் அடைந்தனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து அரசியலில் புதிய எதிரிகளை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஸ்டாலின், அரசியலில் நான் யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை என்று பதில் அளித்தார். அதேபோல், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் விரைவில் திமுக தரப்பில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தலின் போது திமுக எம்பி டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. அதில் அமைச்சர் கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர். மீண்டும் இதே குழு அமைக்கப்படலாம் என்று தெரிகிறது.

அதேபோல் திமுகவை அரசியல் எதிரி என்று கூறிய விஜய்க்கும் முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. திமுகவை விஜய் தொடர்ந்து சீண்டினாலும் 2ஆம் கட்ட மற்றும் 3ஆம் கட்டத் தலைவர்களை வைத்தே பதில் அளித்து வருகிறது. இப்போது விஜய்யை எதிரியாக பார்க்கவில்லை என்று ஸ்டாலின் கூறி இருப்பது தவெகவினரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

error: Content is protected !!