திருச்சி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திய பச்சிளம் குழந்தை திடீர் என இறந்ததால் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல் நிஜார். இவரது மனைவிக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்னர் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அப்துல் நிஜார் 6-வது வாரம் செலுத்த கூடிய முதல் தவணை தடுப்பூசியை நேற்று திருச்சி அரசு மருத்துவனையில் செலுத்தினார். தடுப்பூசி செலுத்திய பின்னர் குழந்தையுடன் வீடு திரும்பினார்.
இந்நிலையில் வீட்டிற்கு சென்றதும் அந்த குழந்தைக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து உடனே பெற்றோர் குழந்தையை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் குழந்தை அங்கு வந்ததும் இறந்துவிட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல் நிஜார் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தியதால் தான் குழந்தை இறந்ததாக கூறி டாக்டர் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுகுறித்து அப்துல் நிஜார் தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
