Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செங்கல்பட்டு நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

செங்கல்பட்டு நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

செங்கல்பட்டு நகராட்சியில் டெங்கு கொசுப்புழுக்களை ஆரம்ப நிலையிலேயே அழிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும், இதில் வீடுகள் மற்றும் வீட்டின் மொட்டை மாடிகளில் தேவையற்ற பொருட்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக கோடை வெயில் கொளுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க தமிழகம் முழுவதும் கோடை மழை பொய்த்துள்ளது.

இந்த ஆண்டு எல்நினோ ஆண்டாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழைக்காலம் தொடங்கியதையடுத்து கொசு உற்பத்தியும் தொடர்ந்து அதிகரிக்கும். தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே சுகாதாரத்துறை சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளன.

அதன்படி, செங்கல்பட்டு நகராட்சி பகுதிகளில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கொசு புழுக்கள் உற்பத்தியாகும் ஆதாரங்களை அதாவது, தேவையற்ற பொருட்கள் வீடுகள் மற்றும் வீடுகளை சுற்றி உள்ள இடங்களில் இருந்தால் அகற்றிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் உருவாவதை தடுத்திட வேண்டும் என்று செங்கல்பட்டு கலெக்டர் வீரப்பன் உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து, நகராட்சி நிர்வாக செங்கல்பட்டு மண்டல இயக்குனர் மாரிச்செல்வி, செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் டெங்கு கொசு புழுக்களை ஆரம்ப நிலையிலேயே அழிக்கும் பணியினை செங்கல்பட்டு நகராட்சி பொது சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் சாம் கிங்ஸ்டன் கூறுகையில், நகர்வாழ் பொதுமக்கள் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். வீட்டினை சுற்றி உள்ள இடங்களில் மற்றும் வீட்டின் மொட்டை மாடிகளில் கிடக்கும் தேவையற்ற பொருட்களான பழைய டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த பூந்தொட்டிகள், போன்றவற்றில் கொசு புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது.

எனவே, தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். நகராட்சி கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாக ஆய்வு செய்ய வரும்போது ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால், நகராட்சி சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமைலான குழுவினரால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!