அமெரிக்காவின் F-15E மற்றும் A-10 என 2 போர் விமானங்களை ஒரே நாளில் ஈரான் சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்களை இயக்கிய விமானிகளை தேடும் பணியில் அமெரிக்க விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
இந்த சூழலில் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டு இருக்கைகள் கொண்ட F-15E ரக ஜெட்டில் இருந்த இரண்டு விமானிகளில் ஒருவரை அமெரிக்க சிறப்புப் படைகள் மீட்டுள்ளதாகவும், மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.செய்தி அறிவிப்புகள்
சுட்டு வீழ்த்திய இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களில் ஒன்று முதலாவது கோகிலுயே மற்றும் போயர்-அஹ்மத் மாகாணங்களிலும், மற்றொன்று வளைகுடாவிலும் விழுந்து நொறுங்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானிய அரசு ஊடகங்கள், எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், அமெரிக்காவின் F-15E ஸ்ட்ரைக் ஈகிள் ரக விமானத்தை ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக கூறியுள்ளன. இந்த விமானம், ஒரு விமானி மற்றும் ஆயுத அமைப்பு அதிகாரியை ஏற்றி செல்லும் விமானப்படை போர் விமானத்தின் ஒரு வகையாகும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக இன்னும் போராடும் திறன் தங்கள் படைகளுக்கு உள்ளது என்பதை இந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியதன் மூலம் நிரூபித்து உள்ளோம் என ஈரான் ராணுவம் கூறி இருக்கிறது. சமீபத்தில் இந்த மோதல் துவங்கியதில் இருந்து அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். “இந்த போரில் ஈரானை தோற்கடித்து முற்றிலுமாக அழித்து விட்டோம்” என்றும், ஈரானின் போராடும் திறன் மிகவும் குறைந்து விட்டதாக என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறிய சில நாட்களிலேயே, ஒரே நாளில் 2 போர் விமானங்களை வீழ்த்தி ட்ரம்ப்பிற்கு ஈரான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து உள்ளது. இதனிடையே தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த வந்த ஒரு அமெரிக்க போர் விமானத்தில் இருந்த விமானி ஒருவர் ஈரான் நிலப்பகுதியில் குதித்து விட்டதாக கூறியுள்ள ஈரான் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று, அந்த அமெரிக்க விமானியை உயிருடன் பிடித்து ஒப்படைப்பவருக்கு விலைஉயர்ந்த பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

