இந்தியா -நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஹாமில்டனில் நேற்று நடந்த 5வது மற்றும் கடைசி டி.20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இருப்பினும் முதல் 3 போட்டியில் வென்ற இந்தியா 3-2 என தொடரை கைப்பற்றியது. இந்தியா தொடரை வென்றாலும் கடைசி 2 போட்டியிலும் மோசமான தோல்வியால் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: எனக்கு அழுத்தம் இருக்கிறது. ஆனால், அதை எதிர்கொள்ளும் அளவுக்கு நான் வலிமையானவன். என்னால் எவ்வளவு காலம் முடியுமோ, அவ்வளவு காலம் இந்த அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியும். என் இயல்பே அப்படித்தான். என்னால் அழுத்தத்தைத் தாங்க முடியும், கடினமான சூழல்களையும் எதிர்கொள்ள முடியும். நான் ஒரு மனிதன் என்பதால், சில நேரங்களில் சோர்வாக உணரக்கூடும். ஆனால், இதுவரை என்னால் அதைச் சிறப்பாகக் கையாள முடிந்திருக்கிறது, என்றார்.
மேலும், முதலில் ஒன்று சொல்கிறேன், இங்கு எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்துவது எனது வேலை கிடையாது. சமூக வலைதளங்களில் வைரலாகும் முடிவுகளை எடுப்பதை விட, சரியான முடிவுகளை எடுப்பதே தலைமைப் பயிற்சியாளராக எனது கடமை. இன்றைய காலகட்டத்தில் வெளியில் நிலவும் பேச்சுகளுக்காக எளிதான முடிவுகளை எடுத்துவிட முடியும். ஆனால் எனக்கு டிரஸ்ஸிங் ரூமில் உள்ள வீரர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே முக்கியம். நீண்ட காலமாக அபாரமாக ஆடி வரும் சீனியர் வீரர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளையும் நம்பிக்கையையும் கொடுக்க வேண்டியது அவசியம்.
நாட்டிற்காக விளையாடும்போது அஜாக்கிரதைக்கு இடமே இல்லை. கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிலருக்கு மட்டுமே இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைக்கிறது. என் அகராதியிலும் சிந்தனையிலும் சம்பிரதாய போட்டிகள் என்று எதுவுமே கிடையாது. ஒவ்வொரு சர்வதேச போட்டியும் நம்மை மெருகேற்றிக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பு. இதே எண்ணம்தான் அணியின் ஒட்டுமொத்த டிரஸ்ஸிங் ரூமிலும் உள்ளது. என்னைப் பொறுத்தவரை, நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் எதையும் ஒளிவுமறைவின்றிச் சொல்வது மிக முக்கியம். அதுதான் ஒரு தலைமைப் பயிற்சியாளரின் கடமை. நான் அதைச் சரியாகச் செய்யும் வரை, யாரையும் நேருக்கு நேர் பார்த்து, எந்தக் கேள்விக்கும் என்னால் பதிலளிக்க முடியும்,”, என்றார்.
நியூசிலாந்துக்கு எதிரான டி.20 தொடரை இந்தியா 5-0, அல்லது 4-1 என கைப்பற்றி இருந்தாலும் ஐசிசி டி.20 தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறி இருக்கும். ஆனால் கடைசி 2 போட்டியிலும் தோல்வி அடைந்ததால் அந்தவாய்ப்பு நழுவியது. இங்கிலாந்து 269, இந்தியா 268 புள்ளிகளுடன் முதல் 2 இடத்தில் உள்ளன. ஆஸ்திரேலியா 260, நியூசிலாந்து 247, தென்ஆப்ரிக்கா 243 புள்ளிகளுடன் முறையே 3முதல் 5வது இடத்தில் உள்ளன.
