கோவையில் தூய்மை பணியாளர்கள் ஒருங்கிணைத்த சமத்துவ விழாவில் தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி கலந்து கொண்டார்… கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளில் அனைத்து தர மக்களும் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் இரண்டு பிளாக்குகளில் மாநகராட்சி வார்டுகளிலும் பணியாற்றும் தூய்மை பணியாளர்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வரும் இந்த பகுதியில் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக,தூய்மை பணியாளர்கள் அமைப்பான பிள்ளையார் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் மற்றும் குடியரசு தின விழா புல்லுக்காடு குடியிருப்போர் வளாகத்தில் நடைபெற்றது..
இதில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி கலந்து கொண்டார். விழாவில் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக ஒயிலாட்டம் நடைபெற்றது. இது குறித்து சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி கூறுகையில்,நாட்டில் ஜாதி,மத,இன வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையை வலியுறுத்த இது போன்ற நிகழ்ச்சிகள் அவசியம் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். குறிப்பாக சமத்துவத்தை வலியுறுத்தும் இந்நிகழ்ச்சியை முழுக்க பெண்கள் ஒருங்கிணைத்து இருப்பது நமது நாட்டின் பன்முகத்தன்மையை காட்டுவதாக அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் நிர்வாகிகள் அபுதாகீர்,வழக்கறிஞர் இஸ்மாயில்,கோவை தல்ஹா மற்றும் புல்லுக்காடு குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நல சங்க தலைவர் அல்லா பிச்சை உட்பட பலர் கலந்து கொண்டனர்.