அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவா மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அக்னி வீரன் கோவில் உள்ளது. இக்கோவிலானது, அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராம மக்களுக்கு
எல்லை காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் இருந்து வருகிறது. கேட்கும் வரங்களை அள்ளிக் கொடுக்கும் தெய்வமாக, இக்கோவில் விளங்குவதால், கோவில் கும்பாபிஷேக விழாவை நடத்த ஊர் மக்கள் முன் வந்தனர். அதன்படி விநாயகர், அக்னி வீரன், நொண்டி வீரன், முருகன், தீப்பாச்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு பரிவார தெய்வங்களுக்கும் சேர்த்து கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி, தொடர்ந்து கோ பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகசான பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான
கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக இன்று தொடங்கியது. நான்கு கால பூஜை முடிந்த பின்னர் சிவாச்சாரியார்கள் யாகசாலைகள் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடத்தை சுமந்து, மங்கள வாத்தியத்துடன் கோவிலை வலம் வந்தனர். பின்பு கோவிலின் ராஜகோபுர விமான கலசத்திற்கு புனித நீரை சிவாச்சிரியார்கள் ஊற்றுவதற்காக எடுத்துச் சென்றனர். அப்போது வானத்தில் கருட பகவான் வட்டமிட்டு கோவிலை சுற்றி வலம் வந்தது. இதனைப் பார்த்த பக்தர்கள் பக்தி கரகோஷம் எழுப்பி பரவசத்தில் மூழ்கினர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீரை ஊற்றினர். பின்னர் ஊற்றப்பட்ட புனித நீரை பக்தர்கள் மீதும் தெளித்தனர். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற இவ்விழாவில் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் திருப்பணி கமிட்டினர் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.