உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி ஆண்டுதோறும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலைத் தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் தற்கொலை இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், இதுகுறித்து மக்களிடம்

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் கருதி பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருச்சி புத்தூர் பகுதிகளில் அமைந்துள்ள தனியார் கல்லூரி சார்பில் (பிஷப் ஹூபர் கல்லூரி) விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் ஆனந்த் கிதியோன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி பெரியார் மாளிகை மற்றும் புத்தூர் நால்ரோடு வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. இதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணி தொடங்குவதற்கு முன்னதாக, தற்கொலை முயற்சிக்கு எதிராக உறுதியேற்கும் நிகழ்வும், கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. இதில் பேராசிரியர்களும் மாணவ, மாணவிகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் தற்கொலை எண்ணங்களைத் தடுத்தல், மனநலத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் உரிய நேரத்தில் உதவியை நாடுவதன் அவசியத்தை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.
