கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண், சென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் தனது ஊரை சேர்ந்த வினோத்குமார் என்பவருடன் இருந்த காதல் உறவை, அவரது நடத்தை சரியில்லாததால் முறித்துக் கொண்டார். ஆனாலும், வினோத்குமார் தொடர்ந்து அந்தப் பெண்ணிற்குத் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
கடந்த 18-ஆம் தேதி அந்தப் பெண் வேலை பார்க்கும் கடைக்கே சென்ற வினோத்குமார், மேலாளரிடம் ‘இவர் என் காதலி, இவரை அழைத்துச் செல்லப் போகிறேன்’ என்று மிரட்டியுள்ளார். பின்னர் வேலை முடிந்து விடுதிக்குத் திரும்பிய பெண்ணை நடுவழியில் வழிமறித்து மீண்டும் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப் படையினர் வினோத்குமாரைப் பிடித்து மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து வினோத்குமாரைக் கைது செய்தனர்.
