கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் பகுதியில் ஒரு தனியார் நிறுவன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் வேலைபார்த்து வந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த ஒரு மாத காலமாக பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர் இருதரப்பு சமரச பேச்சுவார்த்தையில் சுமூக முடிவை தொடர்ந்து, சமீபகாலமாக அனைத்து தொழிலாளர்களும் பணிக்குத் திரும்பி, மீண்டும் வழக்கம் போல் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை பணிக்கு வந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், காலை 9 மணியளவில் தொழிற்சாலை கேன்டீனில் உணவு சாப்பிட வந்துள்ளனர். அப்போது கேன்டீனில் வழங்கப்பட்ட பிரியாணி உணவை சாப்பிட்ட 5 தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். இதனால் கேன்டீனில் வழங்கப்பட்ட பிரியாணி உணவை சக தொழிலாளர்கள் ஆய்வு செய்தபோது, அந்த உணவில் ஒரு பல்லி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியாகி உள்ளனர். இதைத் தொடர்ந்து, பல்லி விழுந்த உணவை சாப்பிட்டு மயக்கமான 5 பேரையும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சக தொழிலாளர்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு 5 பேருக்கும் டாக்டர்கள் தீவிர முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். இப்புகாரின்பேரில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர. விசாரணையில், இறந்து கிடந்த பல்லி விழுந்த உணவை சாப்பிட்டு மயக்கமானது, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுரேஷ் (32), பர்தேஸ் (35), தினேஷ், பாபு (42), முனிபாபு (33) எனத் தெரியவந்தது. மேலும், தனியார் தொழிற்சாலை கேன்டீனில் சுகாதாரமற்ற முறையில் தயாரான பிரியாணி உணவில் பல்லி இறந்து கிடப்பதை ஆய்வு செய்யாமல், அவற்றை தொழிலாளர்களுக்கு வழங்கியவர்கள், அந்த கேன்டீனை நடத்தும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் தனியார் நிறுவன தொழிற்சாலை அதிகாரிகளிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற தனியார் தொழிற்சாலை கேன்டீன்களில் அளிக்கப்படும் உணவுகளை முறையாக எளாவூர் சுகாதார மேற்பார்வையாளர் அலட்சியமாக செயல்படுவதால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி மாவட்ட கலெக்டர், மருத்துவ குழு மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
