கரூர் அருகே பண தேவைக்காக நிலத்தினை கிரையம் வைத்து கடன் வாங்கிய பிரச்சனையில் பெண்மணியை அடித்து கீழே தள்ளிய சிசிடிவி வீடியோவை வெளியிட்டு பாதிக்கப்பட்ட பெண்மணி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம், தென்னிலை அடுத்த வைரமடை கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி இவரது கணவர் பெரியசாமி இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர் . ரேவதி தனக்கு சொந்தமான 1.60 ஏக்கர் நிலத்தை பண தேவைக்காக கருக்கம்பாளையத்தை சேர்ந்த ராஜா மணி என்பவரிடம் 53 லட்சம் ரூபாயை கடனாக கேட்டுள்ளார். அடமானமாக கடன் வழங்க முடியாது என்றும், நிலத்தை கிரையமாக எழுதிக் கொடுக்கச் சொல்லி ஒப்பந்த முறையில் ரேவதி நிலத்தை எழுதிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடனாக பெற்ற பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுத்த ரேவதியிடம், நிலத்தை திருப்பி கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. அனுபவத்தில் உள்ள தனது நிலத்தில் ராஜாமணி ஆட்களை வைத்து உழவு ஓட்டுவதற்காக டிராக்டர் வாகனத்தை அனுப்பி வைத்துள்ளார். அதற்கு எதிராக கேள்வி எழுப்பியபோது, தன் மீது தாக்குதல் நடத்தி கீழே தள்ளியதாக பாதிக்கப்பட்ட ரேவதி இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரேவதி, தன் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, ராஜாமணி மீது நடவடிக்கை எடுத்து தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மேலும், ராஜாமணி அனுப்பிய வேலை ஆட்களை தாக்கியதாக ரேவதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தென்னிலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

