அரியானா மாநிலம் சர்சா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், நேற்று காலை சண்டிகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகக் காரில் சென்றுள்ளனர். திருமண நிகழ்வு முடிந்த பிறகு, நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
பஞ்சாப் மாநிலம் மன்சா மாவட்டம் சர்துல்கர் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த அசோக் குமார், உஷா, ரிது மற்றும் ராதா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டுநர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மகிழ்ச்சியாக திருமணத்திற்குச் சென்று திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

